இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை மட்டுமன்றி தேசம் முன்னேற பாடுபட்ட நேரு, இந்திரா, ராஜீவ் உள்ளிட்டவர்களின் புகழையும் தகர்த்து வரும் பா.ஜ.க. தற்போது நேரு குடும்பத்தையே வேரோடு அழிக்க துணிந்துவிட்டது என்று சிவசேனா கூறியுள்ளது.

சிவசேனா கட்சி நாளேடான சாம்னா-வில் இன்று வெளியாகி இருக்கும் தலையங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்காக காங்கிரஸ் கட்சி கொடுத்த கடனை ரத்து செய்தது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சர்ச்சை காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளது சாம்னா.

ராகுல் காந்தியையும் நேரு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கோடு மோடி அரசு செயல்பட்டு வருவது அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் தெரிகிறது.

விசாரணைக்கான முகாந்திரமோ எப்.ஐ.ஆரோ இல்லாமல் காந்தி குடும்பத்தினரை அலைக்கழிப்பதைப் பார்க்கும் போது, நாட்டில் யாரை வேண்டுமானாலும் சட்டையை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் அதிகாரம் படைத்த எதேச்சதிகார அரசாக பா.ஜ.க. செயல்படுவது தெரிகிறது.

ஹிட்லர் அமைத்தது போல் விஷவாயு கொலைகூடங்கள் மட்டுமே பாக்கி உள்ளது என்று காட்டமாக கூறியுள்ளது சாம்னா.

லாப நோக்கு இல்லாமல் அறக்கட்டளை மூலம் இயங்கும் ஒரு பத்திரிக்கை நிறுவனத்திற்கு அளித்த கடனை தள்ளுபடி செய்தது தவறு எனும் பட்சத்தில் பெருமுதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை இதுவரை எந்தவொரு பா.ஜ.க. தொடர்புடைய நபர்கள் மீதும் வழக்கு தொடுக்காதது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.