நமது இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைககளில் ஒன்று தீபாவளி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வூட்டும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். நமது புராணங்களில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த விதத்தில் தீபாவளி பற்றிய வரலாறுகளைக் காண்போம்
ராமாயணக் கதைப்படி ராமர் தனது வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி எனக் கூறப்படுகிறது. வனவாசத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்று விட அவனை போரிட்டு கொன்ற பின் சீதை மற்றும் தனது தம்பி லட்சுமணன் ஆகியோருடன் ரமர் அயோத்தி திரும்பினார். அது வரை தங்கள் மனதில் இருந்த இருள் நீங்கியது என்பதை குறிக்க வீடெங்கும் தீபம் ஏற்றி மக்கள் கொண்டாடினர். தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என பொருள். அதனால் தீபாவளி உண்டானது என்பது ராமாயண வரலாறு.
விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் அவர் நரகாசுரன் என்னும் அசுரனை கொல்கிறார். அவன் இறக்கும் போது தனது தவறுகளுக்கு வருந்தி கிருஷ்ணரிடம் ஒரு வரம் கோருகிறான். அந்த வரத்தின்படி தனது மரணத்துக்கு யாரும் வருந்த வேண்டாம் எனவும் அனைவரும் இதை புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டும் எனவும் வேண்டுகிறான். மனம் திருந்தியவனை மன்னித்து அந்த வரம் கிருஷ்ணர் அருளினார். இது தீபாவளி பற்றிய மற்றொரு வரலாறு.
ஸ்கந்த புராண வரலாற்றின் படி இந்த நாள் கேதார கவுரி விரதம் இருந்த நாள். அந்த விரதம் முடிவடைந்ததும் சிவன் தனது உடலில் பாதியாக சக்தியை ஏற்றுக் கொண்ட நாள் என இதைக் கொண்டாடுகின்றனர். சக்தியும் சிவனும் ஒன்றாக இணைந்ததை கொண்டாட தீபங்கள் ஏற்றி வணங்குவதாக இந்த வரலாறு தெரிவிக்கிறது.
வரலாறு மாறலாம். ஆனால் பண்டிகையும் கொண்டாட்டங்களும் மாறுவதில்லை. எவ்வளவு கஷ்டத்தில் இருப்பவரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். ஒரு திரைப்படத்தில் கதாநாயகன், “எல்லா நாளும் தான் நமக்கு கஷ்டம், இதில் தீபாவளி மட்டும் என்ன?” எனக் கேட்பான். அதற்கு நாயகி, “எல்லா நாளும் போல இல்லாமல் அந்த ஒரு நாளாவது கஷ்டங்களை மறக்கத்தான் தீபாவளி” என்பாள்.
அனைவருக்கும் பத்திரிகை.காம் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.