டில்லி
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் போர் விமான ஆவணங்கள் திருடப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததை இந்து பத்திரிகை அதிபர் ராம் மறுத்துள்ளார்.
இந்திய விமானப்படைக்காக ரஃபேல் ரக விமானங்கள் பிரான்சிலிருந்து வாங்க இடப்பட்ட ஒப்பந்தத்தில் கடும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் பாஜக முன்னாள் மூத்த தலைவர்களே வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அளிக்கப்பட்ட சீராய்வு மனுவின் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களை ஏற்கனவே தி இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டு இருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் நேற்று உச்சநீதிமன்றத்தில், “தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுளன. இந்த ஆவணங்கள் ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ரகசிய ஆவணங்களை வெளியிடுவது அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய காப்பு சட்டத்தை மீறுவதாகும். எனவே அந்த ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுபவர் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் ஆவார்கள். அத்துடன் நாளேடு ஒன்றில் ரஃபேல் குறித்து செய்தி கட்டுரை வெளியாகி உள்ளது. அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்துள்ளனர்” என தெரிவித்தார்.
இது குறித்தி தி இந்து ஆங்கில நாளேட்டின் தலைவர் என் ராம், “நாங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த ஒரு ஆவணத்தையும் திருடவில்லை. மாறாக நாங்கள் அதை ரகசியமாக சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். எங்களுக்கு தெரிய வரும் எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடக்கூடாது என யாராலும் உத்தரவிட முடியாது.
இது மக்கள் நலனுக்காக புலனாய்வு பத்திரிகை இயல் என்னும் அடிப்படையில் வெளியான தகவல் ஆகும். நாங்கள் திருடப்பட்ட ஆவணங்களில் இருந்து செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்கள் திருடப்பட்டவை என அரசு சார்பில் கூறப்படுகிறதே தவிர உண்மையில்லை என அரசு தெரிவிக்கவில்லை. இதில் இருந்தே இந்த செய்திகள் பொய்ச் செய்திகள் இல்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.