ராமநாதபுரம்

கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஆலயங்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர்

கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமலாக்கப்பட்டது.  இதையொட்டி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.  ஊரடங்கு இருந்த போதிலும் கொரோனா  பாதிப்பு குறையவில்லை.  தமிழகம் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  எனவே  தற்போதைய ஊரடங்கில் பல விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ள போதிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கோரி  இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் நூதன போராட்டங்களை மாநிலம் எங்கும் நடத்தி வருகின்றனர்.  சமீபத்தில் இந்து அமைப்பினர் தோப்புக்கரண போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தி உள்ளனர்.

இந்த போராட்டம் 14 இடங்களில் நடந்துள்ளது.  அவற்றில் ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, உச்சிப்புளி, மண்டபம், சாயல் குடி ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.   இந்த போராட்டங்களில், இந்து முன்னணியின் மாவட்ட தலைவர், நிர்வாகி, பொறுப்பாளர், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.