டில்லி
உலக அளவில் இந்தியாவைப் பிரபலப்படுத்த நாடெங்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துரை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. அனைத்து அரசு தகவல்களும் இந்தியில் இருக்க வேண்டும் எனப் பல அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதற்குத் தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் இந்தித் திணிப்பு மும்முரமாக நடைபெறவில்லை எனப் பலரும் கூறி வருகின்றனர்.
இன்று இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல வட இந்தியத் தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளைப் பதிந்து வருகின்றனர். அவ் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியான ஒரு பதிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அமித் ஷா தனத் டிவிட்டரில்,, “நமது இந்திய நாடு வேறுவேறு மொழிகளைக் கொண்ட நாடாகும். ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால் நாடு முழுமைக்கும் ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உலக அளவில் இந்தியாவைப் பிரபலப்படுத்த முடியும்” என பதிந்துள்ளார்.