அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் அப்போது வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது.
தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து அதானி நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டில் பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியான இந்த அறிக்கையை அடுத்து நாளை திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் அதானி நிறுவனத்தின் பங்குகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு போன்ற சிக்கலான சூழலிலும் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும் என்று அறிவுறுத்திய பங்கு ஏஜெண்டுகள் ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள இந்த புதிய அறிக்கை குறித்தும் அதனால் பங்கு வர்த்தகத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் கூறமுடியாமல் வாய் மூடியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் அதானி நிறுவன பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை உயர்த்திக்காட்டுவதன் மூலம் மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அதானி நிறுவனத்தின் ஷெல் கம்பெனிகள் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படுவதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
இந்த ஷெல் நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோருக்கு பங்கு இருப்பதாகவும் இந்த மோசடியில் இவர்களின் பங்கு அளப்பரியது என்றும் அதில் கூறியுள்ளது.
ஹிண்டன்பர்கின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஹிண்டன்பர்கின் இந்த அறிக்கை அடைப்படை ஆதாரமற்றது என்று அதானி நிறுவனம் மற்றும் மாதபி புச் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் நாளைய பங்கு வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் என்னவாகும் என்று தெரியாமல் அதில் முதலீடு செய்துள்ளவர்கள் குழம்பியுள்ளனர்.