புதுடெல்லி: இந்த நூற்றாண்டின் துவக்கம் முதல், இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் இரண்டு மடங்கு வேகமாக உருகி வருவதாக செயற்கைக்கோள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த அபாயகரமான உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்த இமயமலைதான், ஆசியாவிலுள்ள பலகோடி மக்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதால் உண்டாகும் வெப்பத்தினால், உலகின் துருவப்பகுதிகள் மற்றும் இமாலயப் பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்பது ஏற்கனவே நாம் அறிந்த உண்மை.

தற்போது, இந்த 21ம் நூற்றாண்டின் துவக்கம் முதல், இமாலயப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும் நிகழ்வு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் உருகும் பனியால், உலகின் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்கனவே உணரப்பட்டு வருகின்றன.

அதேசமயம், இமயமலைப் பகுதியில் ஏற்படும் பாதிப்பு என்பது, ஆசியாவில் வாழும் 800 மில்லியன் மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதார தேவைகளை மிக மோசமாக பாதித்துவிடும் என்று கூறப்படுகிறது.