டெல்லி: ஹிஜாப் விவகாரம் தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தேவைப்படும் சமயத்தில் விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளது.

கல்வி நிலையங்களில் சமுத்துவத்தை கடைபிடிக்கும் வகையில், அனைவரும் சமம் என்ற நடைமுறைப்படி, மத அடையாளங்களுடன் வரக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்த 6 இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தது சர்ச்சையானது. இதையடுத்து, சிலர் காவித்துண்டுடன் கல்லூரிக்கு வந்ததைத்தொடர்ந்து, சர்ச்சை பூதாகரமானது.

இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி,நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் மற்றும் நீதிபதி ஜே.எம்.காஜி அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில்  நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, இடைக்கால உத்தரவு வழங்கும்படி, மனுதாரர் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன், இந்த வழக்கில், தீர்ப்பு கூறும் வரை மாணவர்கள் மத அடையாளம் கொண்ட உடைகளை அணியக்கூடாது  உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின்  உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய  மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,  இதுதொடர்பான வழக்கு விசாரணை ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முதலில் முடிவெடுக்கட்டும். அவர்கள் முடிவை அடுத்து, அடுத்தக்கட்டமாக இங்கே விசாரிக்கலாம். இந்த (ஹிஜாப்)  விவகாரத்தை வழக்கறிஞர்கள் தேசிய பிரச்சனையாக்காதீர்கள் என்று அறிவுறுத்தியது. மேலும், இந்த வழக்கை தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை ங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், தேவைப்படும் சமயத்தில், இந்த வழக்கை விசாரிப்போம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.