டெல்லி: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி ஜே.எம்.காஜி அடங்கிய அமர்வு  பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப்அணிவதற்கான தடை செல்லும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இஸ்லாமிய முறைப்படி  ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல. அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு  அனைவரும் உட்பட்டவர்கள். வழக்கின் விசாரணையின் போது,  ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள்  எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று கூறியதுடன், பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது.  ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது நியாயமான கட்டுப்பாடு தான் என்று உத்தரவிட்டதுடன்,  ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டு உள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணையை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது