சென்னை,

தேசிய நெடுஞ்சாலை மாவட்ட சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உச்சநீதி  மன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து மீண்டும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுரைக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுவினால் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகிறது என்று பாமக தொடர்ந்த வழக்கின் காரணமாக, சுப்ரீம் கோர்ட்டு,  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறும், நெடுஞ்சாலையில்  இருந்து 500 மீட்டர் தூரம் வரை உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து பல மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டன.  தமிழகத்தில் 285 டாஸ்மாக் மதுக்கடைகள் நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து கிராமப்பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயன்று வந்தது. ஆனால், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மதுக்கடைகளை திறப்பதில் அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட, மேல்முறையீட்டு  மனுக்களை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட்டு தமது முந்தைய தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டது.

அதன்படி 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளை பொறுத்த வரை, அவற்றில் இருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து மாநிலஅரசுகள்,  மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என்ற பட்டியலின் கீழ் வகைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. இதுகுறித்த வழக்கிலும் உச்சநீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நடைபெற்ற விசாரணையின்போது, நகர்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகப்படி இருப்பதால் அங்கு வேகமாக செல்வது இயலாத காரியம். அது போன்ற நெடுஞ்சாலைகள்தான் மாவட்ட சாலைகளாக வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் எந்த தவறும் இல்லை.

ஒருவேளை நகரங்களில் வாகன நெரிசலற்ற நெடுஞ்சாலைகளை சுட்டிகாட்டினால் அது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 285 டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.