வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 88 வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது இணையத்தில் பதிவேற்றிய கருத்துக்கள் உலகளவில் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த கருத்தை லட்சக்கணக்கானோர் ஆதரித்ததை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்தாயுதமாக மாறியது. இந்நிலையில், கிரேட்டா தன்பர்க்-குக்கு உதவியதாக கூறி, இந்தியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
திஷா ரவியை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்த நிலையில், அரசு சார்பில் அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டது.
வழக்கில் இருந்து விடுவிக்கவும், தனக்கு ஜாமீன் வழங்கவும் திஷா ரவி போராடி வரும் நிலையில், “திஷா ரவி தேச விரோத நடவடிக்கையில் இறங்கி இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு தனது வழக்கறிஞர் மூலம் பதிலளித்த திஷா, “விவசாயிகளின் போராட்டத்தை உலகிற்கு தெரியும் படி எடுத்து கூறியது தேச துரோக குற்றம் என்று கூறினால் அதற்காக நான் சிறையில் இருக்கவே விரும்புகிறேன்” என்று கூறினார்.
ஜாமீன் தொடர்பான இந்த வழக்கில் வரும் திங்களன்று (23 பிப்ரவரி) தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.