சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் இருந்து அகற்ற கோரி திமுக தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ படம் சபாநாயகர் தனபாலால் திறந்து வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தால் சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வைத்தனர்.
அத்துடன் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக சார்பில் அன்பழகன் எம்எல்ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்ததாவது,
சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றங்களால் தலையிட முடியாது என்றும், சபாநாயகர் விதிகளை மீறியிருந்தால் மட்டுமே நீதிமன்றங்களால் தலையிட முடியும் என்றும் கூறினார்.
தலைமை நீதிபதியின் கருத்து திமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும், குட்கா வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று வழக்கு தொடர்ந்துள்ள திமுக எம்எல்ஏக்களும், தலைமை நீதிபதியின் இன்றைய கருத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுபோன்றே தகுதி நீக்கம் வழக்கிலும் சென்னை உயர்நீதி மன்றம், சபாநாயகர் அதிகார வரம்பில் தலையிட மறுத்தால், தங்களின் பதவி கோவிந்தா… கோவிந்தா .. என்று கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.