மும்பை: இந்தியாவில் குறிப்பிட்ட ரக கார்களுக்கு விதிக்கப்படும் அதிக இறக்குமதி வரியால், டெஸ்லா எலெக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் மிகவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு முதலே டெஸ்லா கார் இந்தியாவிற்கு எப்போது வரும்? என்ற கேள்வி இருந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு அந்த காரின் 3வது மாடலை அறிமுகம் செய்தபோது, அந்தக் காரின் விற்பனை இடங்களுக்கான பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போ தொடங்கவிருந்த சூழலில், டெஸ்லா காரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் ஈடேறவில்லை என்று கூறியிருந்தார் அந்நிறுவன தலைவர் எலோன் மஸ்க்.
ஆனால், தற்போது அவரிடமிருந்து வேறுஒரு எதிர்மறையான கருத்து வந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால், அந்தக் காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ரூ.27 லட்சத்திற்கும் அதிகமான விலையுள்ள கார்களுக்கு 100% இறக்குமதி வரியும், அதைவிட குறைந்த விலையுள்ள கார்களுக்கு 60% வரியும் விதிக்கப்படுகிறது.