சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஆன்லைனில் பதிவு செய்து பாஸ் பெற வேண்டும் என காவல்துறை கெடுபிடி செய்து வந்த நிலையில்,  அந்த  பாஸ் நிபந்தனையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை  ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

மதுரையில் இந்து அமைப்புகள் நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள்  அந்தந்த பகுதி காவல்துறையினரை அணுகி பாஸ் பெற்றிருக்க வேண்டும் என காவல்துறை அறிவித்தது.  இதற்கு தனி நீதிபதியும் அனுமதியும் வழங்கியிருந்தார். காவல்துறையின் இந்த நடவடிக்கை, இதுவரை இல்லாத வகையில்,  வாடகை வாகனம்  வைத்திருப்போரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், மாநாட்டுக்கு செல்ல விரும்பியவர்களுக்கும் காவல்துறையினரின் கெடுபிடி கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற  தனி நீதிபதி விதித்த நிபந்தனையை எதிர்த்து இந்து முன்னணி  சார்ல்  மதுரை கிளை  உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை  ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது.

மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி, அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….