குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு மது விற்பனையானதாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 20 அன்று சூரத்-பாங்காக் இடையே தனது முதல் பயணத்தை துவங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 175 பேர் பயணம் செய்தனர்.
98 சதவீத இருக்கைகளில் பயணிகள் இருந்த நிலையில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட இந்த பயணிகள் விமானத்தில் தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அதிகளவு விரும்பி குடித்தனர்.
இந்த விமானத்தில், ரெட் லேபிள், பகார்டி ஒயிட் ரம், பீஃபீட்டர் ஜின் ஆகியவற்றின் 50 மில்லி மினியேச்சர்கள் மற்றும் 330 மில்லி பீரா லாகர் பீர் 400 ரூபாய்க்கும் மற்றும் 50 மில்லி சிவாஸ் ரீகல் மினியேச்சர் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இருந்தபோதும் சிவாஸ் மற்றும் பீரா மது பாட்டில்களுக்கான தேவை அதிகளவு இருந்ததாகக் கூறப்படுகிறது. மதுவுடன், வெஜ் பிரியாணி மற்றும் நான்-வெஜ் நூடுல்ஸ் மற்றும் நொறுக்கு தீனிகளும் அதிகளவு விற்பனையானதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இரண்டு மது பாட்டில்களுக்கு மேல் வழங்கப்படுவதில்லை இருந்தபோதும், பயணி நிதானத்தில் இருப்பதை பொறுத்து அவருக்கு கூடுதலான மது வழங்கப்படும்.
ஆனால், தாய்லாந்து சென்ற இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகளின் நடத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றதை உணர்ந்த விமான ஊழியர்கள் ஒரு கட்டத்தில் சரக்கு தீர்ந்ததாக கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த பலரும் தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து தற்போது இது வைரலாகி வருகிறது.