லூவ்ரெ அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குள் திருடர்கள் எப்படி ஊடுருவினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

“ஓஷன்ஸ் லெவன்” படத்தில் வருவது போல் நுணுக்கமான திட்டமிடல், டீம் ஓர்க் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விலைமதிப்பற்ற பொருட்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அருங்காட்சியகத்தின் ஒதுக்குபுறமான பகுதியில் கொண்டு வந்து நிறுத்திய ஹைட்ராலிக் லிப்ட் மூலம் கட்டுமான பணி நடந்துகொண்டிருந்த தளத்தில் ஏறிய கொள்ளையர்கள்
இயந்திர ரம்பத்தைக் கொண்டு ஜன்னலை அறுத்து உள்ளே சென்றுள்ளனர்.

நெப்போலியன் III மற்றும் அவரது மனைவி பேரரசி யூஜினுக்குச் சொந்தமான நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை ரம்பத்தால் அறுத்து ஒரு நெக்லஸ், ஒரு ப்ரூச், ஒரு தலைப்பாகை மற்றும் யூஜினியின் கிரீடம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து வந்த வழியே தப்பியுள்ளனர்.
இதில் அவர்கள் கொண்டு சென்ற கிரீடம் அருங்காட்சியகத்தின் வெளியில் இருந்ததை அடுத்து அது தவறவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், நெப்போலியனின் கிரீடத்தை அலங்கரித்த 140 கேரட் வைரத்தை மட்டும் அவர்கள் எதுவும் செய்யாமல் அங்கேயே விட்டுச் சென்றனர்.
7 நிமிடத்தில் சினிமா பாணியில் நடந்து முடிந்த இந்த கொள்ளை சம்பவத்தை கலை பொருட்களை சேகரிக்கும் தனியார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்த கொள்ளையை அரங்கேற்றியவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை, இவர்களை தேடும் பணியில் பிரான்ஸ் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
https://patrikai.com/a-daring-daylight-robbery-at-frances-louvre-museum-napoleon-iii-and-empress-eugenies-jewels-stolen/