கொல்கத்தா: மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிகளவிலான ஆட்களை சேர்ப்பதில்லை என்று பாரதீய ஜனதா முகாமில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், யார் எப்படிப்பட்டவர்? என்ற பரிசோதனைகள் இல்லாமல், மாற்றுக் கட்சியினரை அதிகளவில் இணைப்பதற்கு, பாஜக முகாமிலிருந்து எதிர்ப்புகள் எழுந்ததால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட அளவில் மட்டுமே, அதுவும் உள்ளூர் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே அந்த சேர்க்கை நிகழும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, நல்லவிதமான இமேஜ் இல்லாதவர்களை சேர்ப்பதன் மூலமாக, அக்கட்சியின் ‘பி’ டீம் என்ற அடையாளத்திற்குள் நுழையும் அபாயம் பாஜகவுக்கு உள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்கள், வழக்குகளை எதிர்நோக்குபவர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், பிற கட்சிகளிலிருந்து வந்தால் எங்களுக்குத் தேவையில்லை.

எனவே, இனிவரும் நாட்களில் கூட்டங்கூட்டமாக கட்சியில் இணைவது இருக்காது. விசாரணைகளுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே, கட்சியில் அனுமதிக்கப்படுவர்” என்றுள்ளார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா.