திருவனந்தபுரம்

கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் இடைக்கால அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  இந்த பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட பல நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வரும்நிலையில், ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் கேரளா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் 170 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், நீதிபதி சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்பதில் என்ன தாமதம் என கேரள அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசு பதிலளிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்தனர்.

நீதிபதிகள் தற்போது சமர்ப்பிக்கபட்ட ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். ஹேமா கமிட்டி விவகாரத்தை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.