மதுரை:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கோவில்களுக்கு பக்தர்கள் வர தடை போடப்பட்டுள்ளதால், தங்களது வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது. எங்களும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அர்ச்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் இழந்திருப்பதால் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க துணை தலைவர் ராஜா ஸ்வாமிநாத சிவாச்சாரியார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள் உள்ளிட்டோர் மிக குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் தட்சணை மூலமே வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். கோயில்கள் மூடப்பட்டது இவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. எனவே அரசு இவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
கோயில்களுக்கான நைவேத்யம் குறைந்த அளவு செய்தால் போதுமென அர்ச்சகர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். நைவேத்யம் இத்தனை படியளவு என ஆகம விதிவரையறை உள்ளது.மக்கள் வருகைக்கு தக்கபடி ஓட்டல்களில் உணவு தயாரிப்பதை போல நைவேத்யத்தை கையாளக்கூடாது. நைவேத்ய குறைபாடு உள்ளிட்ட பூஜை விதி மீறல் தோஷத்தை ஏற்படுத்தும்.
“ஆற்றரு நோய் மிக்கு அவனிமழையின்றிப்போற்றரு மன்னரும்போர் வலி குன்றுவர் கூற்றுதைத்தான் திருக்கோயில்களெல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே”பத்தாம் திருமுறை,திருமூலர் திருமந்திரம்.
இரண்டாம் தந்திரம் 517கோயில் பூஜை குறைந்தால் அது, அரசு, மக்கள் ஆகியோருக்கு கேடு விளைவிக்கும் என அந்த பாடல் அறிவுறுத்துகிறது.
ஒரு அர்ச்சகர் இரண்டு, மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள நான்கைந்து கோயில்களுக்கு பூஜிக்கிறார். அவர்கள் சென்றுவருவதில் போலீஸ் கெடுபிடி அதிகம் உள்ளது. எனவே அர்ச்சகர்களை தடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.
மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், போன்று நோய்தொற்று அபாயத்தையும் பொருட்படுத்தாது கடவுள் சேவை செய்யும் அர்ச்சகர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே என அரசு அங்கீகரிக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.