சென்னை: அரசுக் கல்லூரிகளில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம்  அமைக்கப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்  தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி  ஏற்படுத்தப்படும்  என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர்ளுக்கு வழிகாட்டும் வகையில் உதவி மையம் செயல்படும்.

பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் உதவி மையம் முலம்  அந்நிறுவனங்களில் வழங்கப்படும். பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது. அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உதவி மையங்கள் ஏ உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும்  அமைக்கப்படும்.  அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் ஒவ்வொரு  கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.