சென்னை

ராளமானோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனவே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்க உள்ளதையடுத்து, வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர்.

இதனால் மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

சென்னையின் நுழைவாயிலான பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.