மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு சுமார்  15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் கடந்த 28ந்தேதி (ஜூன்) முதல் கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

இரவு முதல் தொடர்ந்து மழை கொட்டி வருவதால்,  பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ஆனால், மின்சார ரயில் மற்றும் விமான சேவை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  அடுத்த இரண்டு முதல் 3 நாட்களுக்கு மும்பையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூன் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழை, கடந்த  2 நாளில் 97 சதவீதம் பெய்து விட்டதாக கூறப்படுகிறது. 3-வது நாளாக நேற்றும் மும்பையில் கனமழை பெய்தது.  இன்றும் மழை பெய்து வருகிறது.

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளும் நல்ல மழைப்பொழிவை பெற்று உள்ளன. தற்போது, ஏரிகளில் வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

[youtube-feed feed=1]