பெங்களூரில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் இந்தியாவின் சிலிக்கன் வேலே என்று அழைக்கப்படும் பெங்களூரின் புறநகர் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு சுமார் 11 மணிக்கு துவங்கிய மழை காரணமாக கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் 10 செ.மீ. மழை பெய்தது, இதனால் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லியில் இருந்து பெங்களூரு வரும் விமானங்கள், ஹைதராபாத், சண்டிகர் ஆகிய இடங்களில் இருந்து வரும் விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

தவிர, தாய்லாந்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானமும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.

வடக்கு பெங்களூரின் ஷஹாக்கர் நகர், எலஹங்கா ஆகிய இடங்களில் 11 முதல் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேவனஹள்ளி, கோரமங்களா, பெல் ரோடு ஆகிய இடங்களில் 7 முதல் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.