சென்னை,

ன்று முதல் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. ஆனால், தொடங்கியதுமே மழை வெளுத்து வாங்க தொடங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. ஒரு வாரம் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவாரூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டது.

சென்னையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளிகளுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரம் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில்,  மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து. இன்று இரவு முதல் 4 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, மழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,  அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,  தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும்  ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும், மழை பாதிப்பை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ஏற்கனவே  பெய்த கனமழையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனிமேல் மழை பெய்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தண்ணீர் வடிகால் உள்பட பல பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.