சேலம்: தொடர் மழை காரணமாக சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் இயர்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பல இடங்களில் சாரல் மழை மட்டுமே காணப்பட்ட நிலையில் சேலம், ஏற்காடு உள்பட சில இடங்களில் கனமழை கொட்டியது. இன்றும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதுபோல  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.  இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.  நேற்று நண்பகலில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. புதிய பேருந்து நிலையம்,சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக, சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.  இதேபோல், ஏற்காட்டிலும் நேற்று கனமழை பெய்தது.  இன்றும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால், சேலம் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு இன்று (16-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று (16-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

அதுபோல  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று  இரவு பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  கனமழை  காரணமாக  இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மேலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, ரவுண்டானா பகுதியில் மழைநீர், கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியதால் வாகனங்கள் சாலையில் ஊர்ந்தபடி சென்றன. மேலும், நகரில் பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  அனைத்துப் பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து  கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டுள்ளார்.