சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று பல பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்த சில நாட்களும் மழை பெய்ய வாப்பு உள்ளதாகவும், தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
“கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 17ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ஆக. 18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆக. 19ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஆக. 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் வரும் ஆக. 19 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 17 வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.