சிட்னி
ஆஸ்திரேலியா கண்டத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான விலங்குகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. சுமார் 2000 வீடுகள் எரிந்து தரை மட்டம் ஆகி உள்ளன.
இந்த பகுதிகளில் பரவி வரும் புகை மண்டலம் உலகம் முழுவதும் பரவ தொடங்கி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நாசா இந்த தீயால் உலகம் முழுவதும் புகை சூழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம். ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு வீரர்கள் பல முயற்சி எடுத்தும் இந்த காட்டுத் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை.
நேற்று முன் தினம் முதல் காட்டு தீ பரவிய இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. அது மேலும் பலத்த மழையாக மாறி வருகிறது. இதனால் தீயை அணைக்க முடியும் எனத் தீயணைப்பு வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆயினும் இந்த பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இந்த மழையால் காட்டுத் தீ முழுவதுமாக அணையாது எனவும் தெரிவித்துள்ளது.