சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரித்தப்படுத்தி வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்பட உதவிகள் வழங்கி வருகிறார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை மற்றும் பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணீரால் மூழ்கி உள்ளது, பல பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் கடந்த 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மழை பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக பார்வையிட்டு வருகிறார். நேற்றும் மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். நேற்று காலை 10.30 மணிக்கு களத்திற்கு சென்றவர் இரவு 7.30 மணி வரை 9 மணி நேரம் விடாமல் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். எழும்பூர், பாடி உள்ளிட்ட 11 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து இன்று 2வது நாளாக வடசென்னையின் பல பகுதிகளில் பார்வையிட்டு வருகிறார். துறைமுகம் தொகுதியில் கல்யாணபுரம் கால்வாய், கல்யாணபுரம் மருத்துவ முகாம், வுட்வர்ப் வாயில் எண். 4 ஆகிய இடங்களை பார்வையிட்டார். தொடர்ந்து ராயபுரம் தொகுதியில் பாரத் திரையரங்கம் ரவுண்டானா, மழைநீர் தேங்கிய பகுதி பார்வையிடுதல், உணவு மற்றும் நிவாரண உதவிளை வழங்கினார்.
தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் பாலம், கால்வாய் , மகாகவி பாரதியார் நகர் (MKB Nagar), பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.