பெய்ஜிங்:
சீனாவில் பெய்த கனமழையால் 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்த பகுதியில் குடியிருந்த 16,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் வெள்ள கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை, லியோனிங்கின் பெரும்பாலான பகுதிகள் மிதமான மற்றும் கனமழை பெய்தது. சில பகுதிகளில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கன மழையால், இதுவரை 16,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாகாணத்தில் வசித்து வந்த 4,513 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, இந்த கனமழையால் மொத்தமாக 2,533.13 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 27.33 ஹெக்டேர் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக 168 மில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.