ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

terror

கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவ்வபோது ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகின்றது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் மூத்த தளபதிகள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்த நிலையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் முழு நேர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் மீமந்தர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை தொடர்ந்து மேலும் யாராவது பதுங்கி உள்ளனாரா என பாதுகாப்பு படை வீரரகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.