சென்னை:
தமிழகத்தை மிரட்டி வந்த ‘ஃபானி’ புயல் தற்போது தமிழக எல்லையை கடந்து ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் தீவிர புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் , ஃபானி புயலாக மாறியது. இது தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மத்திய மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தனது முகத்தை ஒடிசாவை நோக்கி திருப்பியது.
இதன் காரணமாக தமிழக கடற்கரையோரம் சில பகுதிகளில் லேசான மழையை கொடுத்து விட்டு, அதிக வெப்பத்தை வாரிவழங்கிவிட்டு ஒடிசா கடற்கரை நோக்கி பயணமாகி வருகிறது. தற்போது ஆந்திராவில் இருந்து சற்று துாரத்தில் சென்றுகொண்டிருக்கும் புயலானது, நாளை ஒடிசா பூரி கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஒடிசாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பத்து லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே கிழக்குக் கடலோரப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் 103 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.