லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இன்று செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் ஒரு விமானம் மீண்டும் மும்பைக்குத் திரும்பியது, மற்றொரு விமானம் பிராங்பேர்ட்டுக்குத் திருப்பி விடப்பட்டது மற்றும் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் மற்ற விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மின் தடையைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரோவில் (LHR) மார்ச் 21 அன்று 2359 மணி (உள்ளூர் நேரம்) வரை அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியாவைத் தவிர, பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் ஆகியவை பல்வேறு இந்திய நகரங்களுக்கும் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான LHR க்கும் இடையே தினசரி நேரடி விமானங்களை இயக்குகின்றன.
“மும்பையில் இருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் செல்லும் AI129 மும்பைக்குத் திரும்புகிறது; டெல்லியில் இருந்து AI161 பிராங்பேர்ட்டுக்குத் திருப்பி விடப்படுகிறது. இன்று காலை AI111 உட்பட லண்டன் ஹீத்ரோவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் எங்கள் மீதமுள்ள அனைத்து விமானங்களும் மார்ச் 21 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் லண்டன் கேட்விக் விமான நிலையம் செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.
விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் படி, மார்ச் 21 அன்று ஏர் இந்தியா LHRக்கு 6 விமானங்களைக் கொண்டுள்ளது, மொத்தம் 1,843 இருக்கைகள் உள்ளன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்தியாவிற்கும் LHRக்கும் இடையே ஒரு நாளைக்கு 8 விமானங்களை இயக்குகிறது, இதில் மும்பையிலிருந்து 3 மற்றும் டெல்லியிலிருந்து 2 விமானங்கள் அடங்கும். விர்ஜின் அட்லாண்டிக் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து LHRக்கு 5 தினசரி விமானங்களை இயக்குகிறது.
உலகம் முழுவதும் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மார்ச் 21, 2025 அன்று 669 விமானங்கள் இயங்க இருந்ததாகவும் இதில் மொத்தம் சுமார் 1,45,000 பயணிகள் பயணிக்கக்கூடிய இருக்கைகள் இருப்பதாகவும் சிரியம் தெரிவித்துள்ளது.
“விமான இருக்கைகள் பெரும்பாலும் நிரம்பாது என்றபோதும் தினசரி திட்டமிடப்பட்ட மொத்த இருக்கைகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 145,000 பயணிகள் பாதிக்கப்படலாம்” என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஹீத்ரோவிலிருந்து பயணிக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.