சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள், 18 வயதுடைய இளம் வயதினரிடையே வேகமாக அதிகரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர்கள் குழுவால் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து, கடந்த மாதம் ‘யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்’ இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், கோவிட்-க்கு பிந்தைய அழற்சி, மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணம் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ACS பாதிப்புடன் ஆய்வு செய்யப்பட்ட 10,842 நோயாளிகளில், சுமார் 70% பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், மற்றும் 2,457 பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 74.6% பேர் இளம் ஆண்கள், 24.4% பேர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெண்களிடையே பாதிப்புகள் குறைவாக இருப்பதற்குக் காரணம், மாதவிடாய் நிற்கும் காலம் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வழங்கும் பாதுகாப்புதான். ஆனால், அதனால் அவர்களுக்கு ஆபத்து இல்லை என்று அர்த்தமல்ல,” என்று இந்த ஆய்வை வழிநடத்திய இருதயநோய் நிபுணர் டாக்டர் சிசிலி மேரி மஜெல்லா கூறியுள்ளார்.

கோவிட்-க்கு முன்பு, இளம் வயதினரிடையே பாதிப்புகளின் எண்ணிக்கை 2018-ல் 315-லிருந்து 2019-ல் 380 ஆக உயர்ந்தது. கோவிட்-க்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 2021-ல் 480 ஆகவும், 2022-ல் 564 ஆகவும் அதிகரித்தது. “பெருந்தொற்று காலத்தில் பாதிப்புகள் குறைவாகப் பதிவு செய்யப்பட்டதால், 2020-ல் சுமார் 200 பாதிப்புகளுடன் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது.

எங்கள் ஆய்வில் கர்ப்பிணிப் பெண்கள் சேர்க்கப்படாதது மற்றொரு வரம்பு,” என்று டாக்டர் மஜெல்லா குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர் எஸ். சதீஷ் கூறுகையில், கோவிட்-க்குப் பிந்தைய பாதிப்பு அதிகரிப்பிற்கான காரணம், “இந்த வைரஸ் இதயத்தின் இரத்த நாளங்களில் அழற்சியைத் தூண்டி, இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது ACE2 ஏற்பிகள் எனப்படும் சிறப்பு நுழைவுப் புள்ளிகள் வழியாக இதயம் மற்றும் நுரையீரலுக்குள் நுழைகிறது, அதனால்தான் இந்த இரண்டு உறுப்புகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றன” என்றார்.

இருதயநோய் நிபுணர்கள், இந்த நிலை 2025-லும் தொடர்வதாகக் கூறுகின்றனர். வைரஸால் மட்டுமல்லாமல், வேலை மற்றும் கல்வி தொடர்பான தொடர்ச்சியான மன அழுத்தம், அதனுடன் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றாலும் இதயத் தசைகளில் அழற்சி ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரியவர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி அல்லது ஒன்றரை மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று இருதய நோய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மோசமான வாழ்க்கை முறை கடுமையான கரோனரி சிண்ட்ரோம் (ACS) நிலையைத் தீவிரப்படுத்தலாம்.

“புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால், 40% அடைப்புகள் உள்ள பல இளைஞர்களின் நிலை மோசமடைகிறது. அதே சமயம், 70% அடைப்புகள் உள்ள முதியவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால், குறைந்த அளவு மருந்துகளுடன் பெரும்பாலும் நிலையாக இருக்கிறார்கள்,” என்று இதய நோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க, தடுப்பு மற்றும் ஆரம்பக்காலத் தலையீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

“பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை தவிர்க்க கூடாது, மாணவர்கள் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும், இது மன அழுத்தத்தையும், உடல் அழற்சியையும் குறைக்கும்” என்று டாக்டர் மஜெல்லா கூறியுள்ளார்.

மேலும், “இளம் வயதினராக இருந்தாலும், அடிக்கடி மார்பு வலி, மூச்சு திணறல், காரணமில்லா சோர்வு போன்ற சிக்கல் இருந்தால் ஈசிஜி அல்லது எக்கோ பரிசோதனை செய்வது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்,” என்று அறிவுறுத்தியுள்ளார்.

[youtube-feed feed=1]