டெல்லி: நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக கண்டறியப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதார இணை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 11,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,305 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு அதிதீவிரமாக உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும். நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் தீவிர கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவல் இதுவரை சமூக பரவலாக மாறவில்லை.
மாவட்டங்கள் தீவிர தொற்று கொண்டவை, தொற்று அல்லாத மாவட்டங்கள் மற்றும் பசுமை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹாட் ஸ்பாட்கள் என்பவை அதிக தொற்றுகள் அல்லது தொற்றுகள் அதிவேகமாக இரட்டிப்பு வீதத்தை காட்டும் மாவட்டங்களாகும்.
நாடு முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட்களை கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை மாநிலங்கள் வெளியிட்டன. அந்த பகுதிகளில் வீடு, வீடாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்யாவசிய சேவைகளுடன் தொடர்புடையவை தவிர, கட்டுப்பாட்டு மண்டலங்களில் இயக்கம் அனுமதிக்கப்படாது என்று கூறினார்.