டில்லி:
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நாடா இன்று லோக்சபாவில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் நாட்டில் மருத்தவ கல்வியை ஒழுங்குபடுத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மசோதாவுக்கு கடந்த 13ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஊழல் மற்றும் முறைகேட்டில் சிக்கியுள்ள மருத்துக கல்வி துறையை புணரமைக்கும் நோக்கத்தோடு இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆணையத்தின் மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுகலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கிகாரம், மருத்துவர்கள் பதிவு போன்றவற்றை கண்காணி க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தலைவர் மற்றும் ஆணைய உறுப்பினர்களை அரசு நியமிக்கும். துறை செயலாளர் தலைமையிலான குழு வாரிய உறுப்பினர்களை தேர்வு செய்யும். இதில் 5 தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், 12 முன்னாள் அதிகாரிகளும் இடம்பெறுவார்கள்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும் நிலைக்குழுவின் பரிந்துரைகள் மசோதாவில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பதிலளித்தார்.
மேலும், அந்த மசோதாவில் பொது நுழைவு தேர்வு மற்றும் மருத்துவராக பணியாற்ற அனைத்து மருத்துவ பட்டதாரிகளும் உரிம தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.