சென்னை: அண்ணாத்தபடப்பிடிப்பு குழுவினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ரஜினி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த நிலையில், மீண்டும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் , ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் உருவாகி வருகிறது. இந்த  படத்தின் படக்குழுவினர்  8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரஜினிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று இல்லை என்றும், நெகடிவ் என்று சோதனை முடிவு வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இருந்தாலும், அவர்  தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

இன்று இரவு அல்லது நாளை அவருக்கு மீண்டும் டெஸ்ட் எடுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் மீண்டும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.