தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் தொடர்பான வரிகள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது அதில் இடம்பெற்ற ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடப்பட்டது.

இந்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொண்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, திராவிடம் தொடர்பான வரிகள் விடுபட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்.

சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்.

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!” என கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.