சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரித்துறை வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் வரும் 27ந்தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

வருமான வரி முறைகேடு செய்ததாககார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர், சொத்து விற்பனை செய்த தொகையான ரூ.7 கோடியே 73 லட்சத்தை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக எழும்பூர் கோர்ட்டில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, கடந்த ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட , எம்.பி.எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கு கடந்த 7ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், அவர்களின் மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், தங்களது வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை காலதாமதமின்றி விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டியது உள்ளது. மேலும், இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே மனு தாரர்கள் தொடர்ந்துள்ளனர். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, சிறிது காலத்துக்கு வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்றும், ‘இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி எவைக்கிறேன். அதுவரை கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிறப்பு கோர்ட்டு நிறுத்திவைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]