ஒரே ஆண்டில் ஊட்டச்சத்து குறைவால் 18,000 ஏழைக் குழந்தைகள் இறந்ததற்கு மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அந்த அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
மும்பைக்கு வெகு அருகில் உள்ள பால்கார் உட்பட 11 மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் பழங்குடி மக்கள் உள்ள 11 மாவட்டங்களில் அதிகரித்துவரும் குழந்தைகள் மரணத்துக்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடாகும். கடந்த ஓராண்டில் மட்டும் 18,000 குழந்தைகள் போதிய ஊட்டசத்துள்ள உணவின்றி இறந்துள்ளனர். இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கஸ்தூரிபா ஆதிவாசி மகிளா சங்கம் என்ற அமைப்பு தொடுத்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசின் அலட்சியப் போக்கை கடுமையாகக் கண்டித்தனர். ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவு வழங்குவதெற்கென்று ஒதுக்கிய நிதியெல்லாம் எங்கே போகிறது? இன்னும் இத்தகைய கொடூர மரணங்கள் தொடர்வதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். கடந்த 2010-இலிருந்து இந்த நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படதாக தெரியவில்லை. இது இன்னும் தொடர்ந்தால் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.