ஜம்மு-காஷ்மீர்:
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க லடாக், ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கேட்டு கொண்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதல் முக்கியக் கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று மட்டும் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 3,061 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 80 மருத்துவமனைகளிலும்ஸ 1,477 வீடுகளிலும் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஜம்மு காஷ்மீர் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.

கொரோனா வைரஸின் தாக்கம் ஜம்மு காஷ்மீர் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல் உயிரிழப்பு கடந்த மார்ச் 26-ஆம் தேதி ஏற்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகர் அருகே ஹைதர்போரா பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், அவர் உயிரிழந்தார். ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநகர் பெண், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த பொதுநல வழக்கை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரித்த தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சிந்து சர்மா ஆகியோரின் பிரிவு பெஞ்ச், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க லடாக், ஜம்மு காஷ்மீர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள தங்கும் விடுகளில் தங்கியுள்ள யாத்தீரிகர்களை, காலி செய்ய வலியுறுத்த வேண்டாம் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் சிக்கித் தவிக்கும் பீகாரில் இருந்து வந்த 400 யாத்ரீகர்கள், சரியான முறையில் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.