சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் நினைவிடமாக மாற்றி உத்தரவிடப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 2017 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜெ.வின் வாரிசுகளான, ‘ தீபா மற்றும் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த நவம்பர்24 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியது. அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வீட்டின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு கையகப்படுத்தது செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம் மனுவை தாக்கல் செய்தார். மனுவில், வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கப் பட்டதை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நினைவு இல்லத்தை வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவது அரசு மற்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என்ற தனி நீதிபதியின் கருத்து அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்ல சாவியை வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டால் அதிமுக பெரும் இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி வழங்கி உள்ளது.