டமாஸ்கஸ்: உணவும் நீரும் இல்லாமல் ஒருநாள் முழுவதும் இருந்திருக்கீறீர்களா டிரம்ப்? என்று, பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாட்டவர்கள் அமெரிக்காவி்ற்குள் நுழைவதற்கு, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். உலகம் முழுவதும் சர்சசையைக் கிளப்பியுள்ள இந்த உத்தரவால், அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது சிரிய அகதிகள் தான்.
ட்ரம்ப் தனது அறிவிப்பை வெளியிட்ட உடன், சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி பானா அலபெத், ட்விட்டர் வழியாக அவருக்கு பதில் அளித்திருந்தார். அதில், ‘நான் என்ன தீவிரவாதியா? அகதிகளை நாட்டுக்குள் வர விடாமல் தடுப்பது மிகவும் தவறு. ஒரு வேளை அது சரியென்றால், பிற நாடுகள் போரின்றி அமைதியாக இருக்க உதவுங்கள்’ என்று கூறியிருந்தார்.
தற்பொழுது பானா ட்விட்டரில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், ‘என்றாவது உணவும் நீரும் இன்றி ஒருநாள் முழுவதும் இருந்திருக்கீறீர்களா ட்ரம்ப்? சிரியாவில் உள்ள அகதிகள் மற்றும் குழந்தைகளின் நிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்’ என்று உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தாயார் பாத்திமா உதவியுடன், சிரியாவில் நடக்கும் போர் பற்றிய கருத்துக்களை, பானா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவரை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.