லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து சமாஜ்வாதி கட்சி நடத்திய பேரணியை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.
ஹத்ராஸ் பட்டியலின பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு, நாடு முழுவதும் பல்வேறு பெண்கள் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இதை கண்டித்து சமாஜ்வாதி கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணியின் ஒரு பகுதியாக, காந்தி சிலை அருகே அமைதிப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். அதன்படி ஹஸ்ரத்கஞ்ச் பகுதியிலிருந்து அவர்கள் காந்தியின் படங்களை ஏந்தியபடி, முகக்கவசம் அணிந்து பேரணியாக புறப்பட்டனர்.
வழியில் தடுப்புகளை அமைத்து அவர்களை முன்னேற விடாமல் போலீசார் தடுத்தனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சமாஜ்வாதி தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அவர்கள் கைது செய்தனர்.