சென்னை:
ராமசாமி படையாச்சியார் சிலை, மணிமண்டபத்தை தமிழக முதல்வர் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், பாமகத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் நேற்றே திறந்து, ராமசாமி படையாச்சியார் சிலை அருகே நின்று போட்டோ எடுத்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாட்சியரின் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மணி மண்டபம் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ள நிலையில், நேற்றே, பாமகத்தலைவர் ஜி.கே.மணி உள்பட பாமகவினர் நினைவு மண்டபத்துக்குள் புகுந்து, அங்குள்ள ராமசாமி படையாச்சியார் சிலை முன்பு நின்று போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.
இந்தப் புகைப்படம் வாட்ஸ் அப்களில் பரவியது. நேற்று அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில், இந்த புகைப்படம், அதிமுக அமைச்சர்களின் மொபைல்களுக்கும் வந்தது. இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே மருத்துவமனையில் இருந்த ராமதாஸை நேரில் சந்தித்து பேசிய முதல்வர், அப்போது ராமசாமி படையாச்சி மணிமண்டப திறப்பு விழாவுக்கான அழைப்பைக் கொடுத்ததாகவும், அதுபோல ராமதாசின் தைலாபுரம் தோட்டத்திற்கும் அமைச்சர்கள் சென்று பத்திரிகை கொடுத்ததாகவும் அதிமுக தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், முதல்வர் திறக்கும் ஒரு மணிமண்டபத்தை, அதற்கு முன்பே பாமகவினர் சென்று திறந்து, படம் எடுப்பது எந்த வகையில் நியாயம், அரசு செலவில் கட்டப்ட்டுள்ள ஒரு மணிமண்டபத்தை அரசே திறப்பதற்கு முன்பே, ஒரு பிரிவினர் எப்படி உள்ளே சென்று புகைப்படங்கள் எடுக்கலாம்? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
பாமகவினரின் இந்த அடாவடி நடவடிக்கை தமிழகஅரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் தமிழக அமைச்சர்கள் மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், நேற்றே நினைவு மண்டபம் திறக்கப்பட்டு, படம் எடுக்கப்பட்டுள்ளது, அதிமுக பாமக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகைப்படம் உதவி: நக்கீரன்