குர்கான்
அரியானா மாநில அரசு மின்வாரியத்திடம் இருந்து அமைச்சரின் சகோதரர் தான் கட்டாத வரியை கட்டியதாக கூறி திரும்ப பெற்றுள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கை கூறுகிறது.
அரியானா மின் வாரியம் பலவேறு பொருட்களை தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் வாங்கி வருகிறது. இவ்வாறு வாங்கும் போது அந்த தனியார் நிறுவனம் மத்திய விற்பனை வரியை முன்பு செலுத்த வேண்டி இருந்தது. ஒப்பந்தப்படி அந்த மத்திய விற்பனை வரியை வாரியம் ஒப்பந்த தாரர்களுக்கு திரும்ப செலுத்தி விடும். அதற்கான சரியான ஆவணங்களை ஒப்பந்த தாரர் அளிக்க வேண்டும் என்பது விதி.
அரியானா அமைச்சர் கேப்டன் அபிமன்யுவின் சகோதரர் சத்யபால் சிந்து. இவர் சியாம் இண்டஸ் பவர் சொலுஷன்ஸ் பி லிமிடெட் என்னும் நிறுவனத்தைன் நிர்வாக இயக்குனர் ஆவார். இந்த நிறுவனத்தின் மூலம் இவர் அரியானா மின் நிறுவனத்துக்கு கடந்த 2013 ஆம் வருடம் அக்டோபரில் இருந்து 2016 ஜனவரி வரை சுமார் ரூ. 70 கோடி அளவுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார். அதற்கு தாம் மத்திய விற்பனை வரி செலுத்தியதாக பில்களை அளித்து ரூ. 1.41 கோடி ரூபாயை மின் வாரியத்திடம் இருந்து பெற்றுள்ளார்.
இந்த பில்களை ஆராய்ந்த மத்திய கணக்கு தணிக்கை நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “சியாம் இண்டஸ் பவர் நிறுவனம் வரி செலுத்தாமல் பொருட்களை மின் வாரியத்துக்கு விற்பனை செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் விற்பனை வரிக் கணக்கில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் வரி செலுத்தியதாக போலி பில்களை கொடுத்து வரியை கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் திரும்ப பெற்றுள்ளது. வரி செலுத்தியதற்கான ஆதாரங்களை மின் வாரியம் கேட்காமலே மற்றும் பரிசீலிக்காமலும் இந்த பணத்தை அளித்துள்ளது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரோ மற்றும் நிறுவன இயக்குனரான அவர் சகோதரரோ கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.