சண்டிகர்: மாநிலத்தில் கண்டு வரப்பட்டுள்ள தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு, என்பது  தொழில்நுட்பமற்ற வேலைகளுக்கு மட்டுமே என அரியானா முதல்வர்  மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.

அரியானா மாநிலத்தில் தனியார்துறையில், மாநில மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.  இதில் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதுகுறித்து மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான கட்டார் விளக்கம் அளித்து உள்ளார்.

அரியானா அரசாங்கத்தின் முடிவு அங்குள்ள தனியார்  நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது,  மாநில அரசின் இடஒதுக்கீடு  அறிவிப்பு அங்குள்ள தொழிற்துறை நிறுவனங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதுடன் பங்குதாரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.   இந்த அறிவிப்பால் பல  நிறுவனங்கள் மாநிலத்தை வெளியேற  வழிவகுக்கும் என்ற அச்சத்தைத் ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசின் இடஒதுக்கீடு முடிவை ரத்து செய்யுமாறு பல நிறுவனங்களும் சில தொழில் அமைப்புகளும் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதின.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  டீம்லீஸ் சர்வீசஸின் இணை நிறுவனரும் நிர்வாக துணைத் தலைவருமான ரிதுபர்ணா சக்ரவர்த்தி, அரசின் இந்த அறிவிப்பு நிறுவனத்தை முற்றிலுமாக சாய்த்து விடும் என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இடஒதுக்கீடு தொடர்பாக  ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்த முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறியதாவது,

அரியானாவில் உள்ள உள்ளூர் மக்களுக்கு வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். உள்ளூர்வாசிகள் 75 சதவிகித இடஒதுக்கீட்டைக் கோரினர், அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம், ”பொதுக்கொள்கையில் புதுமைக்கான சிந்தனை இது. அரியானாவில் உள்ள  பாரதீய ஜனதா கட்சி  கூட்டணி அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு தெளிவாக எழுதப்பட்டுள்ளது. “இது ஆரம்பத்தில் இருந்தே அறிக்கையில் எழுதப்பட்டது. அப்போது யாரும் அதற்கு எதிராக பேசவில்லை. இன்றும் யாரும் அதற்கு எதிராக இல்லை.

இந்த சட்டத்தினால்  தொழில்துறையினர் பயப்பட ஒன்றுமில்லை என  தெளிவுபடுத்தியதுடன்,  இந்த இடஒதுக்கீடு சட்டம் தொழில்துறைக்கு எந்தவித பாதிப்போ,  தாக்கத்தையோ   ஏற்படுத்தாது. தொழிற்துறையினர், மாநில அரசின்  சட்டத்திற்கு இணங்குவதாக சுய அறிவிப்பை வழங்க வேண்டும், அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளும்.

தனியார் துறையில் 75 சதவீத வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவு தொழில்நுட்பமற்ற துறைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த இடஒதுக்கீடு விதி தொழில்நுட்ப வேலைகளில் செயல்படுத்தப்படவில்லை. அதுவும், 75 சதவீத இடஒதுக்கீடு மாதத்திற்கு ரூ .50,000 க்கும் குறைவான சம்பளம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த இடஒதுக்கீடுகள் குறித்து தொழிலாளர் ஆய்வாளர் தொழில்துறையைத் தொந்தரவு செய்ய மாட்டார் என்றும், இந்த இட ஒதுக்கீடு தொடர்பான இணக்கத்தை விசாரிக்கும் அதிகாரம் மாநில தொழிலாளர் ஆணையருக்கு மட்டுமே இருக்கும் .

“தனியார் துறையில் வேலைகளுக்கான இடஒதுக்கீடு கொள்கையைக் கொண்ட ஒரே மாநிலம் அரியானா மட்டும்  அல்ல. இத்தகைய கொள்கைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அமலில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.