சண்டிகர்: மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரான ராம்பால் மஜ்ரா, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இவர் மொத்தம் 3 முறை, அம்மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, பாஜகவில் இணைந்தவர் இந்த மஜ்ரா.
இவர், அதற்கு முன்னதாக, இந்திய தேசிய லோக்தள்(ஐஎன்எல்டி) கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர். ஐஎன்எல்டி கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினராக இருந்த அபாய் செளதலா, வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகளுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, தற்போது, பாஜகவிலிருந்து விலகியுள்ளார் மஜ்ரா.
“விவசாயிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ள மத்திய பாஜக அரசு தவறிவிட்டது மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார் மஜ்ரா.