டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உடன் பிரபல மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்தித்து பேசினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட உள்ள நிலையில், இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, பாஜக எம்.பி.யான WFI முன்னாள் தலைவரும் BJP தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மற்றும் ஒருவர் மீது பல பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ராகுல்காந்தி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவின் சொந்த ஊரானா அரியான மாநிலத்தில் உள்ள ஊருக்கு சென்று அவரை சந்தித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிந்த ராகுல் காந்தி, “பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார். ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் போடப்படும் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், மற்ற குழந்தைகளை மல்யுத்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?
இவர்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள், இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு இவர்கள் சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும்.” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது அரியானா மாநிலசட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் தோல்வியை சந்தித்த வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங்புனியா ஆகியோர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மத்திய பாஜகவுக்கு எதிராக களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் வரும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவை எதிர்த்து போட்டியிட வைக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அரியானா மாநிலசட்டமன்ற வேட்பாளர்கள் குறித்த செய்தியாளர்களிடம் பேசிய இதுகுறித்து கூறிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா , கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 66 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி சார்பில் 10 இடங்கள் கோரப்பட்டுள்ளன. 90 இடங்களில், 49 இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் போட்டியிடும் 41 இடங்களில் 32 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் அவர்களி பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்படுவார்களா என்பது குறித்து, வியாழக்கிழமைக்குள் தெரிய வரும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று காலை காஷ்மீர் செல்வதற்கு முன் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.