பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது.
உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் பரவத்தொடங்கியது என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், உண்மைத்தகவல்களை வெளியிடாமல் சீனா மறைத்து விட்டது என்பது அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின் குற்றச்சாட்டுகளாகும்.
இந் நிலையில், ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு ஆகஸ்டு முதல் சீனாவில் பரவி இருக்கலாம். மருத்துவமனை பயண முறைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளதாக கூறுகிறது.
ஆனால் சீனா இந்த அறிக்கையை அபத்தமானது என்று நிராகரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறியதாவது: போக்குவரத்து, மேலோட்டமான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருவது நகைப்புக்குரியது, நம்பமுடியாத அபத்தமானது என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதுவரை குறைந்தது 4.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாகும்.