சென்னை
ஊதிய பேச்சுவார்த்தையில் தாமதம் உண்டாவதால் இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
மத்திய அரசு வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை தொடர்ந்து தனியார் மையமாக்கி வருகிறது. எனவே பெரிய துறைமுகங்களில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. துறைமுகங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 20 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றிய வருகின்றனர்.
மத்திய கப்பல்துறை அமைச்சகம் 3-வது மற்றும் 4-ம் நிலையில் பணியில் நிரந்தர தொழிலாளர்களை நியமிக்காமல் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க கடந்த நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வேலைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர் விரோதப் போக்கினை கைவிடக் கோரியும் துறைமுக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் பெரும் துறைமுகங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
றைமுக ஊழியர்களின் இருதரப்பு ஊதியப் பேச்சுவார்த்தையை முடிப்பதிலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலும் ஏற்பட்ட காலதாமதத்தை கண்டித்து துறைமுகங்களில் உள்ள இந்திய நீர் போக்கு வரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.), அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு (எச்.எம்.எஸ்.) (குல்கர்னி), அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு (எச்.எம்.எஸ்.) (சாந்தி படேல்). இந்திய தேசிய துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ஐ.என்.டி.யு.சி.) மற்றும் துறைமுகம், கப்பல்துறை மற்றும் நீர்முனை தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.டி.யு.சி.) ஆகிய 5 சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று இந்திய நீர் போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் டி.நரேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.